×

நரிக்குறவர்களின் பிடியில் பழநி பஸ் நிலையம் பயணிகள் முகம் சுளிப்பு

பழநி, டிச.18: பழநி பஸ் நிலையம் நரிக்குறவர்களின் பிடியில் இருப்பதால் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பழநி நகரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் பஸ் போக்குவரத்து உள்ளது. அதிகளவு பஸ்கள் வருவதால் பழநி பஸ் நிலையம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தவிர, பஸ் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டது.இந்நிலையில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்ட பழநி பஸ் நிலையம் தற்போது நரிக்குறவர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. நரிக்குறவர்கள் பயணிகள் நிற்கும் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து கடைகளை விரித்துள்ளனர். மேலும், அங்கேயே படுத்து உறங்குகின்றனர். பிளாட்பார ஓரத்திலேயே சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற அசுத்தங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பழநி பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் நரிக்குறவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பழநியை சேர்ந்த சரவணன் கூறுகையில், பழநி நகருக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்துள்ளனர். அதுபோல் வெளியூர்களில் இருந்து ஏராளமான நரிக்குறவர்கள் ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக பழநி நகரில் குவிந்துள்ளனர். இவர்களுக்கு இருப்பிடம் இல்லாததால் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நரிக்குறவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : Palani ,bus station commuters ,
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு